தமிழில் கலைச்சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும். புதிய கலைச்சொற்கள் கொண்டு தமிழை வளர்க்கலாம் வாரீர் என்று மக்களின் நேரத்தையும்,உழைப்பையும் உறிஞ்சி அவர்களை மேலும் படு குழியில் தள்ள தமிழ்த் தலைவர்கள் ஆவலாக உள்ளனர். அந்த வரிசையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து விட்டார்.
வாழ்கையே போராட்டமாக இருக்கும் பல மக்களுக்கு, ஆங்கிலம் மூலமாக ஒரு நல்ல வாழ்வு அமைந்தால் அதை எடுத்துக்கொண்டு மேலே செல்வது தான் அவர்கள் செய்வதாக இருக்கும். செய்ய வேண்டியதும் அதுவே.
அதை விடுத்து அவர்களை தமிழில் படி, தமிழ் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று பொய்யுரை சொல்லி, வார்த்தை விளையாட்டுக்களால் மயக்கி,அவர்கள் வாழ்க்கையை நாசம் செய்வது என்ன வகையில் சரி ?
எழுத்தாளர் சுஜாதா திவ்யப்ரபந்தம் முதலிய நூல்களில் இருந்து பல கலைச்சொற்களைத் தொகுத்து எழுதினார்.அவை யாவும் ஆழ்வார்கள் முதலானர்வர்களால் பாசுரங்களில் பயன்படுத்தப்பட்டன. அவற்றை விடுத்து இவர்கள் மீண்டும் புதியதாக சொற்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்று அலைவது எவ்வகையில் சரி ? ( சுஜாதா எந்த காரணத்துக்காக தமிழ் எழுத்தாளர்களாலும் அரசாங்கத்தாலும் கண்டு கொள்ளப்படவில்லை என்பது அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவு தேவை இல்லை ).
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் "
என்று பாரதி சொன்னார். கலைச்சொல் கண்டு பிடி என்று சொல்லித் தமிழனை சாகடிக்கவில்லை.
தாம் வயிறும் வங்கிக் கணக்கும் வளர்ப்பதற்காக மொழி வெறி வளர்த்து அதன் மூலம் அரசியல் செய்தார்கள் தமிழ் இனத் தலைவர்கள்.
கவிஞர் இளம்பிறை ,
"அம்மா அடுப்பைப் பற்றவை குளிராவது காய்வோம் " என்று அருமையாக எழுதினார்.
ஒரு வேளை உணவுக்கே அல்லாடும் தமிழனை பகுத்தறிவு பேசி, வாத்தைகளால் மயக்கி ஒரு கார்த்திகை சொக்கப்பானை போலே வேண்டும்போது கொளுத்தி விட்டுக் குளிர் காய்வதே இந்த தனித்தமிழ் ஆதரவு எழுத்தாளர்களின் வேலையாகப் போய் விட்டது.
அவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது உள்ள அரசியல் தலைவர்களும் - ஒருவருக்கொருவர் முதுகு சொரிந்து விடுவார்கள்.
இது தமிழ் நாட்டின் சாபக்கேடு போலும்.
No comments:
Post a Comment