Sunday, February 10, 2013

பிராமணனாகப் பிறந்தாலே


பிராமணனாகப் பிறந்தாலே பூணூல் தரிப்பது ஒரு முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது. அதுவும் இவன் பிராமணன் என்று அடையாளம் காட்டி அவனை பகுத்தறிவாளர்கள் அந்த காரணத்துக்காகவே இழிவு படுத்துவதற்க்காகவாவது அது பயன் படுகிறது என்பது உண்மை.

இப்படி ஒரு சமூக மக்களை அடையாளம் காட்டுவதற்காகவா இந்த முப்புரி நூல் என்று சங்க இலக்கியங்களால் காட்டப்படும் ஒரு புனித அணி பயன் படுகிறது? பூணூல் என்னும் அந்த முப்புரி நூலிற்கு அர்த்தம் என்ன? அதை அணிவதால் ஒருவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அதனால் அவன் வாழ்வில் அடையும் நிலை என்ன ? என்று பார்த்து அதன் பிறகு இந்த சடங்கு தற்போது எப்படி நடத்தப்படுகிறது என்பதையும் பார்ப்போம்.

பூணூல் போடுவதற்கு உப நயனம் (उपनयन ), பிரம்மோபதேசம் ( ब्रह्म्मोपदेश) என்று பெயர். உப நயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்று பொருள் - அதாவது பிரம்மத்திற்கு அருகில் அழைத்துச் செல்லுதல் . பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன் என்று அழைக்கப்பட்டான்.

தந்தை மகனை குருவின் அருகில் அழைத்துச்செல்கிறார். பிறகு குரு பிரம்மத்தின் அருகில் அழைத்துச்செல்கிறார்.உப நயனத்தின் பிறகு சிறுவனுக்கு வேத பாடங்கள் தொடங்க வேண்டும், கல்வி அறிவு பெறத்தொடங்க வேண்டும். அதற்க்கான ஒரு MILESTONE தான் உப நயனம்.

உபநயனம் ஆன பின் சிறுவன் இரு பிறப்பாளான் ஆகிறான். அன்றிலிருந்து பார்ப்பனன் என்ற உயர் நிலையை அடைய முதல் அடி எடுத்து வைக்கிறான்.

நூல் தரித்து காயத்ரி மந்திரத்தை உபதேசம் பெற்ற பின் அவன் வாழ்வில் பிரமச்சரிய விரதம் மேற்கொள்ளத்துவங்குகிறான். வாழ்வின் சுகங்களிளிருந்து விலகி பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்று கடுமையான விதி உள்ளது. குருவிடம் கல்வி கற்கும்போது, அவருக்குப் பணிவிடை செய்து குருகுலவாசம் செய்ய வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

முப்புரி நூல் என்பது ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்று குணங்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற ஒரு BOUNDARY CONDITION. ஒரு தடை மாதிரி அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டியது. இந்த மாதிரியான தடைகள் இருந்தால் தான் அவன் கவனம் வேறு எங்கும் செல்லமால் கல்வியில் இருக்கும் என்று அன்று நினைத்தார்கள்.

முப்புரிநூல் குரு, பெற்றோர், கடவுள் ஆகிய மூவருக்கும் கடன் பட்டவன் என்பதைக் குறிப்பதாகவும் ஒரு சாரார் கூறுகிறார்கள்.

உப நயனம் ஒரு வைதிக கர்மா - அதாவது நியமங்கள் படி அது ஆடம்பரம் இன்றி பக்தியுடனும் அளவிடமுடியாத மரியாதையுடனும், சிறுவன் நல்ல முறையில் படிக்க வேண்டுமே நல்ல கல்விமானாக வேண்டுமே என்ற ஆதங்கத்துடனும் குருவின் சொல்படி நடந்து பிரமத்தை அறிய வேண்டுமே என்கிற வேண்டுதலுடனும் செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்வு.

உபநயன நாளிற்கு முன் நாள் இரவு, சிறுவன் மௌன விரதம் கடை பிடிக்க வேண்டும். அது அவன் தன தாயின் கர்ப்பத்தில் இருப்பதை உணர்த்துகிறது. மறு நாள் காலை, சிறுவனும் அவன் தாயும் ஒன்றாக உணவு அருந்துகிறார்கள். பின்னர் சிறுவனுக்கு உபநயனம் நடை பெறுகிறது.இவ்வாறு அவன் இரு பிறப்பாளன் ஆகிறான்.

இப்படி வைதீகமாக செய்ய வேண்டிய ஒரு புனித சடங்கைத் தற்போது எப்படி நடத்துகிறார்கள் ?

தற்போது அடுத்தவன் வீட்டு உப நயனத்தைவிட தன் வீட்டு உப நயனமே அதிக சிறப்பாகவும் ஆடம்பரத்துடனும் நடந்தது என்று வெளிக்காட்டிக் கொள்ளும் வகையில் ஒரு கல்யாணம் போலே மிகுந்த தடபுடல்களுடன் ஆடம்பரங்களுடனும் அதிகப்படியான உடுப்பு மற்றும் பேச்சுக்களுடனும் நடக்கின்றன. ஒரு 3 லட்சம் ருபாய் செலவு ஆகிறது என்று அறிகிறேன்.

முக்கியமாக உபநயனம் ஒரு சிறுவனைப்பற்றியது என்பது போய் தாய் தந்தையரின் STATUS சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாகிவிட்டது ஒரு சோகமே.

உப நயனம் ஆனசிறுவனும் அன்று தவிர வேறு நாட்களில் ஒரு வேளை கூடசந்தியாவந்தனம் பண்ணுவது கிடையாது. அப்பா செய்தால் தானே மகன் செய்வது அப்பாவிற்கு பணத்தின் மேல் கண். அம்மாவிற்கு டிவியின் மேல் கண். மகனுக்கு COMPUTER GAMES மீது கண்.

சிலப்பதிகாரத்தில் அந்தணர்கள் பற்றி வருகிறது ( வேறு பல நூல்களிலும் வருகிறது தான். ஆனால் இப்போது அவகாசம் இல்லை ). கண்ணகி மதுரையை எரிக்கும் போது இவ்வாறு கூறுகிறாள் :

" ஆவும் ஆநிரை பார்ப்பன மக்களும் பெண்டிரும் பிணி உடையீரும் "

என்று இவர்களை விடுத்து மற்ற எல்லாவற்றையும் பொசுக்கிவிடுமாறு அக்னி தேவனை வேண்டுகிறாள். அவள் அந்தக்கால பிராமணர்களை விட்டுவிடக் கூறுகிறாள். அவர்கள் அவ்வளவு கல்விமான்களாக இருந்திருப்பார்கள் போலே.

காஞ்சிப் பெரியவர், கலி காலத்தில் இந்த பூணூல் என்பது ஒரு அந்தணனுக்கு அடையாளம் என்று மட்டுமே தெரியப்படும் என்று பழைய சாஸ்த்ரங்களில் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார்.

இன்று பிராமணன் யாரும் பிரம்மத்தை அறிந்ததாகத் தெரியவில்லை. வெறும் பிராமஹத்திகளாக இருக்கிறார்கள் என்று வேதனையுடன் நினைக்க வேண்டி இருக்கிறது.

பி.கு :

  1. உபநயனம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்ற எண்ணம் தவறு. க்ஷத்ரிய மற்றும் வைசியர்களுக்கும் இந்த கர்மா இருக்கிறது. தற்போது க்ஷத்ரிய , வைசிய திருமணங்களில் இது நடை பெறுகிறது. அன்று மட்டும் அவர்கள் பூணூல் அணிகிறார்கள். தற்போது தங்கத்தில் பூணூல் அணியும் வழக்கம் உள்ளது.
  2. தற்போது இவ்வளவு பணம் செலவு செய்து உபநயனம் செய்ய பலராலும் முடியாத காரணத்தால் சமஷ்டி உபநயனம் செய்ய வேண்டிய ஒரு நிலையில் ஒரு SOCIAL EVENT தேவைப்படும் நிலையில் பிராம்மண சமூகம் உள்ளது. இந்த சமஷ்டி உபநயனங்கள் பழைய காலத்திலும் இருந்தன. அப்போதும்  பிராம்மண சமூகம் இருந்த ஒரு வறிய நிலையை அறியலாம்.

1 comment:

  1. பூனூல் எதற்காக என்று தெரியாதவர் பலர். ஷாமன் என்னும் ஒரு ஆன்மீக இயக்க்ததைப் பற்றி கார்லோஸ் காஸ்டனீடா என்பவர் எழுதியுள்ள் பல சிறிய புத்தங்களைப் படித்தால் புரியும்.
    பூனூல் ஒரு இய்ந்திரம். காரில் உள்ள கியர் போல. அதை மாற்று வழியில் அணியும்போது புலங்களால் அறிய இயலாத உலகத்தோடு தொடர்பு கொள்ள இயலும்.
    இன்று கிய்ர் ராடு இருக்கு கியர் பாக்ஸ் இல்லை. read for some interesting books on spirituality in Tamil and english for free from: free-ebooks.net/search/natarajan

    ReplyDelete