Monday, January 28, 2013

ரங்கு (எ) ரங்க பாஷ்யம்

"ஏண்டா கோந்தே, எப்போ வந்தே ?", கேட்டபடியே வந்தாள் மைதிலி மாமி.

எனக்கு இருபது  வயசு  ஆனாலும் மாமிக்கு நான் "கோந்தே" தான்.

மாமியின் கோந்தேயும் நானும் கிளாஸ் மேட்ஸ். அவன் பெயர் ரங்க பாஷ்யம். எங்களுக்கு ரங்கு.

"ரங்கு எப்படி இருக்கான் மாமி ?", கொஞ்சம் பயத்துடனே கேட்டு வைத்தேன்.

"இப்போ கொஞ்சம் தேவலாம். நீ செத்த வந்து பாரேன்..", மாமி சொன்னாள்.

ரங்கு ஒரு ஜீனியஸ் என்பது போல் தான் இருந்தான். சின்ன வயதில் ஏகாம்பரம் சார் அவனை Child Prodigy என்று சொன்னது உண்மை.

10 வயதிற்குள் திவ்ய பிரபந்தத்தில் பாதிக்கு மேல் தலை கீழாக ஒப்பிப்பான். ரங்கராஜ பட்டாச்சாரியார் மகன் என்பதால் ஆகமங்கள் எல்லாம் அறிந்தான். பூஜை மந்திரங்கள் அவ்வளவும் அத்துப்படி.

அவன் அப்பா போகாத நாட்களில் கோவில் பட்டர் வேலை இவனுடையது.நான் நண்பன் என்பதால் எனக்கு சர்கரைப்பொங்கல் ஒரு கரண்டி அதிகம் தருவான். ( பத்து தடவை சேவிக்க வேண்டும் அப்புறம் தான் தருவான் ).

இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் என்னுடன் என் வகுப்பில் படித்தான்.படு சுட்டி.

பிசிக்ஸ் கை வந்த கலை. அதுவே அவனுக்கு எதிரியானது. ஒரு நாள் பிசிக்ஸ் டீச்சர் Neil Bohr ன் Atomic Theory  நடத்தினார்.

"இது என்ன தியரி? ஆழ்வார்கள் அப்போவே சொல்லி இருக்காளே ..." என்று ஆரம்பித்தான்.

"ஆழ்வார்கள் சொன்னதை ராமானுஜர் பின் பற்றி விசிஷ்டாத்வைதம் அருளினார். ஜீவாத்மா பரமாத்மா வேறே. அதுலே பரமாத்மா தான் இந்த யூநிவைரஸ் ( Universe ) லே இருக்கற காஸ்மிக் எனெர்ஜி (Cosmic Energy ). ஜீவாத்மா நம்ப உடம்புக்குள்ளே இருக்கு. இந்த ஜென்மத்துலே மனுஷ உடல்.அடுத்த ஜென்மத்துலே வேற உடல். சட்டை போட்டுக்கற மாதிரி..

ஒரு பசு மாட்டோட வாலே நுனிலே வெட்டி அத நூறு பங்கா பண்ணி, அதுலே ஒரு பங்கே எடுத்து அதே நூறு பங்கா பண்ணி, அதோட ஒரு பங்குலே மனசாலே ஒரு பங்காக்கினா அது என்ன அளவோ அது தான் ஜீவாத்மாவோட அளவு. அது கண்ணாலே பார்க்க முடியாது ..."

இப்படி பேசி Neil Bohr நம்ம சித்தாந்தத்தை பின் பற்றி COPY பண்ணினான்னு சொல்லி அதனாலே ஸ்கூல்லேருந்து சஸ்பென்ட் ஆனான். பிசிக்ஸ் வாத்தியார் ஒரு நாஸ்திகவாதி.

ரங்கராஜ பட்டாச்சாரியார் பிரின்சிபால் கால் பிடித்து மறுபடியும் அவனை சேர்த்துக்கொண்டார்.

அதன் பிறகு ரங்கு யாருடனும் பேசுவதில்லை.என்னுடன் மட்டும் எபோதாவது பேசுவான். மற்ற நேரங்களில் கோவிலில் உட்கார்ந்து கொண்டு " A Comparison between ஆழ்வார் பாசுரம் and the Theory of Relativity" என்று ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பான்.

ஒரு சிலர் ஜீனியஸ் என்றார்கள்.

பலர் "பையன் ஒரு மாதிரி.. குணசீலம் போய்ட்டு வாங்களேன் " என்று அறிவுரை சொன்னார்கள்.

பத்தாம் வகுப்பு பாதியில் தான் அந்தத் திருப்பம் வந்தது. அது வரை யாருடனும் பேசாத ரங்கு, பெருமாளுடன் பேச ஆரம்பித்தான். ஆம். பாதி நேரம் கோவில் கருவறை வாசலில் நின்றுகொண்டு கையை ஆட்டி ஆட்டி பெருமாளுடன் ஏதேதோ  பேசுவான். சில சமயம் அமர்ந்து கொண்டு நோட்ஸ் எடுப்பான்.

ஸ்கூலில் TC கொடுத்து விட்டார்கள். பட்டாச்சாரியார் அழுது புரண்டு பார்த்தார்.ஸ்கூல் விடாப்பிடியாக இருந்துவிட்டது.

வருடங்கள் பறந்தோடின. நான் காலேஜ் சேர சென்னை வந்து விட்டேன். ஒரு முறை ஊருக்குப்போன போது ரங்கு கொஞ்சம் மாறி விட்ட மாதிரி தெரிந்தது. அம்மா போகாதே என்றாள். இருந்தாலும் போனேன்.

அவர்கள் வீட்டில் பெருமாள் பூஜை அறை சட்ட்று விசாலாமாக இருக்கும்.அவனுக்கு அந்த அறையையே கொடுத்து விட்டார்கள். மேதுவாகச் சென்று பார்த்தேன்.

 உரித்த கோழியாய் , பரட்டை தலையும், அழுக்கு வேஷ்டியுமாக

"முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண ..." என்ற பாசுரத்தில் கூறப்படுவது யாதெனில், ஒரு காலத்தில் சூரியனே இல்லாமால் இந்தஉலகம் இருந்தது.அதனால் தான் ஆழ்வார் "இருள் மண்டி உண்ண .." என்று கூறுகிறார். So he must be referring to the Ice Age. As there was no sun light, all the water had frozen and hence there was Ice every where. At the same time, there was no light , hence it was also dark all the time ..." என்று உரக்க பேசிக்கொண்டும் அதே நேரத்தில் எழுதிக்கொண்டும் இருந்தான்.

 எதிரில் பெருமாள் விக்ரகம்.

என்னைப் பார்த்தவுடன்," டேய் நீ பிசிக்ஸ் லே தானே Ph.D  பண்றே, நான் சொல்றேன் மில்கி வே (Milky Way ) தான் பாற்கடல் னு. நீ என்ன சொல்றே ?" என்றான்.

"இல்லைடா ரங்கு, நான் Chartered Accountancy படிக்கறேன். இந்த பிசிக்ஸ் எல்லாம் எனக்கு வரலே ", என்று சொல்லி சமாளித்தேன்.

பிறகு பதினைந்து  வருடங்கள் கழித்து  இன்று தான் டெல்லியிலிருந்து  ஊருக்கு வருகிறேன்.

ரங்கு வீட்டை விற்று விட்டார்கள். பட்டரும் மாமியும் காலமாகி விட்டார்கள். ரங்கு என்ன ஆனான் என்றே யாருக்கும் தெரியவில்லை. மனம் கல்லானது.

மறுபடி டெல்லி செல்ல சென்னை சென்ட்ரல் வந்தேன்.

சென்ட்ரல் ஸ்டேஷன்ல் யாரோ உரக்க பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

"How is it that the cost of borrowing is more than the cost of lending ? Would this not induce inflation ? Can you explain the rationale ? "

வழக்கமான குரலாக இருந்தது.

கிழடு தட்டிய ரங்கு கையில் கழியுடன் நிற்கும் காந்தி சிலையிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் கையிலும் கழி இருந்தது.

மக்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

ஒரு தகர டப்பாவில் சில காசுகள் தெரிந்தன.

No comments:

Post a Comment