"என்ன தம்பி பாக்கறீங்க ? ஆச்சரியமா இருக்கா ? ஆமாம். நான் தான் கொலை செஞ்சேன் .. இப்போ என்ன அதுக்கு ?", ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அவர்.
நல்ல சிவப்பழமாக நின்றார். நெற்றியில் பட்டையாக திருநீறு,வெள்ளை வேட்டி, மேலே வெள்ளைத் துண்டு. ஒரு ஆறு அடி உயரம்.
பார்த்தவுடன் எழுந்து நின்று கும்பிடத்தோன்றும்.
நான் நீதிபதியாகையால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
அவருக்கு வக்கீல் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நேரடியாக நானே விசாரணை செய்ய வேண்டிய ஒரு கட்டம்.
குற்றப் பத்திரிகையில் எழுதியிருந்தது :
பெயர் : சிவாகடாட்ச ஓதுவார்
வயது : 72
தந்தை பெயர் : (காலஞ்சென்ற) சிவ குருநாத ஓதுவார்
முகவரி : கைலாசநாதர் கோவில் வீதி, காஞ்சிபுரம்.
குற்றம் : கொலை
"ஐயா , முழுக்க உண்மையும் சொல்றீங்களா ?", மரியாதையுடன் கேட்டேன்.
அவர் சொன்னது இதுதான். பதிவு செய்து இருந்தேன்:
"நாங்க ஓதுவார் சாதிங்க.பல நூறு காலமா அந்த சிவன் கோவில்லே ஓதுவார் வேலை செஞ்சு வரோம். வேலைன்னு சொல்லக் கூடாது.எங்க கடமை. இறைவன் தொண்டு அப்பிடின்னு தான் எங்க ஐயா சொல்லுவாரு. தொண்ணூற்றி ஏழு வயசு இருந்து, போன மாசம்தான் சிவபதம் சேர்ந்தாரு.
"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே .." னு பாட தொடங்கினா நேரம் போறதே தெரியாம தேவாரம், திருவாசகம்னு ஓதிகிட்டே இருப்போம்.
கண்ணு முன்னாடி சிவா பெருமான் தெரிவாரு. ஒடம்பு ஓஞ்சு போற வரை ஓதுவோம் நானும் என் தம்பியும். ஐயா கேட்டுகிட்டே ஆனந்தப் பாடுவாரு.
அதும் திருவாதிரை, தை பூசம் னா கேக்கவே வேணாம். விடி காலிலே எழுந்து கோயில் போயிருவோம்.ராவுலே உச்சிகாலம் முடிஞ்சா பொறவுதான் வருவோம்.
எங்களுக்கு பல்லவ ராசாவெல்லாம் நெறைய மானியம் கொடுத்து இருந்தாங்களாம். பல ஏக்கரா நன்செய் இருந்ததுன்னு சொலுவாங்க.அதுனாலே சாப்பாடு கஷ்டம் இல்லாமே அந்தே சிவனேன்னு சிவன் பத்தின திருமுறை எல்லாம் ஓதி வந்து மன நிறைவோடே இருந்தோமுங்க.
இப்போ கொஞ்ச வருஷம் முன்னாடி நில உச்ச வரம்பு சட்டம் னு ஒரு சட்டம் கொண்டாந்து எங்க வயத்துலே அடிச்சாங்க.எல்லா நெலமும் போச்சு.ஒரு வேளை கஞ்சிக்கே சிவன் கோவில் லே யாராவது ஊத்தினாதான் உண்டுன்னு ஆகிருச்சு.
இருந்தாலும் எங்க ஐயா, "அடேய், இது சிவனுக்கும் நமக்கும் உள்ள ஒரு தொடர்புடா. பூமியே அழிஞ்சாலும் நீ இந்த வேலையை விடக்கூடாதுன்னு சொல்லுவாரு. நாங்களும் அப்படியே வளர்ந்துட்டோம்.
வயத்துலே பசி இருந்தாலும் ஒரு பதிகம் சொல்லி ஒரு மொடக்கு தண்ணி குடிச்சா போதும்னு வாழ்ந்து வந்தோமுங்க.
அப்போ பார்த்து ஒரு கோஷ்டி வந்ததுங்க.நாலு பேர் வடக்கே இருந்து வந்தாங்க.தமிழ் விட்டு விட்டு பேசுனாங்க. பதிகம் பாடுங்க. பொட்டிலே பதிவு செஞ்சுக்கறோம்னு சொல்லி பணம் எல்லாம் குடுத்தாங்க. எங்க ஐயா தடுத்துப் பார்த்தாருங்க. தெய்வ குத்தமா போகுமடா , வேண்டாம்டானு சொன்னாருங்க.
பாவி மனசு ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்படுதுங்க.
அதுனாலே கோவில் உள்ளே போய் சித்தர் சமாதி கிட்டே உக்காந்து பதிகம் பாடினோமுங்க.ராத்திரிதான் அவுங்க பதிவு பண்ண முடியும். அப்போதான் நல்லா வரும்னு சொல்லி ராத்திரி பத்து மணிக்கு மேலே கோவிலுக்குள்ளே உக்காந்து பதிவு பண்ணினாங்க.
பாடத் தொடங்கினா எனக்கு நேரம் போறதே தெரியாதுங்க.வெளிலே என்ன நடக்குதுன்னே தெரியாது. சுமார் ஒரு மணி நேரம் கழிச்சு பார்த்தா,ஒருத்தன் தான் இருக்கான்.மத்த மூணு பெரும் காத்து வாங்க போயிருக்காங்கன்னு சொல்றான்.
நாடு சாமம் ஆச்சு.நானும் "உலகெல்லாம் உணர்ந்து" லே தொடங்கி மங்களம் படற வரை வந்து "நாத விந்து கலாதி நமோ நமே .." திருப்புகழ் பாடி முடிச்சுட் டேங்க. மூணு பேரே இன்னும் காணோம்.
சரி பணம் குடுங்கடானு கேட்டா அதெல்லாம் பின்னாலேனு சொல்றான்.எனக்கு ஒரு மாதிரி வந்துட்டு..
அப்போ பாருங்க, அவங்கள்ளே ரெண்டு பேர் கோவில் உள்ளிருந்து ஏதோ சாக்கு மூட்டை மாதிரி தூக்கிட்டுப் போனாங்க.
என்னடான்னு பார்த்தா, வடிவுடை அம்மன் விக்ரகமுங்க.
தூக்கி வாரிப் போட்டுச்சுங்க. என்னடான்னு சொல்லதுக்கு முன்னே பெரிய கத்தியே காமிச்சாங்க.
அடே கொள்ளைக் காரப்பசங்களா னு கத்திக்கிட்டே, ஒரு வேகத்துலே கருப்புசாமி அருவா இல்லேங்க, அதே ஒரே புடுங்கா தரைலேர்ந்து புடுங்கி , எப்படித்தான் அவ்வளவு சக்தி வந்துச்சோ தெரியலீங்க, ஒரு வீசு வீசுனேன். ரெண்டு தலை விழுந்துச்சு.இன்னொருத்தன் ஓடிட்டான்.
இப்போ சொல்லுங்க, நான் செஞ்சதுலே என்னங்க தப்பு ?"
வழக்கை ஒத்தி வைத்தேன். ஒருமுறை காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சென்று வரலாம் என்று.
No comments:
Post a Comment