Wednesday, January 30, 2013

ஆமாம் கொலை தான் .... பாகம் 2

காஞ்சிபுரம் சென்று வந்த பிறகு  மறு விசாரணை.

ஓதுவார் வரவில்லை.அன்று சிவ ராத்திரியாம். ஆகையால் நாள் பூராவும் உண்ணா விரதமாம்.

மறுநாள் வழக்கு விசாரணை.

"நான் தான் சொன்னேனே ஜட்ஜ் தம்பி. நீங்க இவ்வளோ தூரம் கஷ்டப்பட வேண்டாம்.கொலை செஞ்சது நான் தான்".

ஏனோ மனம் ஒப்பவில்லை.

"ஐயா, நீங்க செஞ்சது கொலை தான் . ஆனா அதுக்கு தண்டனை ரொம்ப கடுமையா இருக்கும்.அதாலே மீண்டும் நினைவு படுத்தி சொல்லுங்க. அவுங்க உங்கள தாக்கினான்களா? அதுனாலே நீங்க ஆயுதம் எடுத்தீங்களா ?"

தற்காப்புக்காக ஆயுதம் எடுத்தார் என்று காரணம் கற்பித்து தண்டனையை குறைக்கலாம் என்று முயற்சி செய்தேன்.

"ஜட்ஜ் தம்பி, நான் சொல்றத கேட்டுக்குங்க.

நான் நினைச்சிருந்தால் அவங்கள கொல்லாம இருந்திருக்கலாம்.ஆனா என்ன - ஆயிரம் வருஷ வரலாறு போகும்.பல்லவ ராசா காலம் முன்னலேருந்து இந்த மக்களை காவல் காக்கற வடிவுடை அம்மா இங்கிலாந்து போயி ஒரு கண்ணாடி பேழைக்குள்ளே நிப்பாங்க.

ஆனா இங்கே இருந்தா, மக்களை நிதமும் பாத்துகிட்டே இருப்பாங்க.

என்ன உபயோகம்னு கேக்கறீங்களா ? இந்த மக்களுக்கு ரொம்ப படிப்பறிவு எல்லாம் இல்லே.அரசாங்கமும் ஒன்னும் செய்யலே.வானம் பாத்த பூமி தான்.ஆனாலும் மக்கள் ஒரு ஒழுங்கு முறையோடு இந்த அம்மா முன்னாடி நடந்துப்பாங்க.

பொய் சொல்ல மாட்டாங்க.திருட மாட்டாங்க.தேர்தல் நேரத்துலே அரசியல்வாதிங்க வந்தாகூட கோவில் கிட்டே வந்து பொய் சொல்ல மாட்டாங்க.அந்த மாதிரி அம்மா பாத்துப்பாங்க.

ஊர்லே ஒரு கட்டுப்பாடு இருக்கும்.

தெரியுங்களா சேதி  ஐயா ? எங்கே ஊர்லே போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. யாராவது தப்பு செஞ்சா நேரே கைலாசநாதர் சந்நிதி தான், வடிவுடை அம்மா சந்நிதி தான்.அங்கே வெச்சு எவனாவது பொய் சொல்லுவான் ?

இதெல்லாம் ஒரு நொடிலே அழிக்கப் பார்த்தாங்க பாவிங்க.

அதாலேதான் விடக்கூடதுனு போட்டேன் ஒரே போடா. தேங்கா சீவுற மாதிரி.

இந்த கட்டை கெடக்குதுங்க. இன்னும் அஞ்சு வருஷமோ பத்து வருஷமோ. போய்ச்சீற வேண்டியது தான். எழுவது வருஷ கட்டை இது.

ஆனா வடிவுடை அம்மா ஆயிரம் வருஷமா நிக்கிறா. அது போகலாமா ? ஊரும் நாடும் போய்டுமே ஐயா.

நீங்கே விதிக்க வேண்டிய தண்டனையா விதிங்க.எல்லாம் நீங்களா செய்யறீங்க ? செவனேன்னு இருக்கற சிவன் செய்யறான்.

அன்ன ஒரே ஒரு வேண்டுகொளுங்க. தண்டனை காலம் முடியற வரைக்குமோ அல்லது தண்டனைகாலதுகுள்ளே என் காலம் முடியற வரைக்குமோ தினமும் கைலாசநாதர் வடிவுடியாமா முன்னாடி நின்னு ஒரு பதிகம் பாட முடியும்படியா  நீங்க உத்தரவு போடணும்.

செய்வீங்களா தம்பி?"

சொல்லிவிட்டு ஓதுவார் விடு விடு என்று பதிலுக்கு நில்லமால்  இறங்கிச் சென்றார்.

என்  ராஜினாமா கடிதம் தயார் செய்ய தட்டேழுத்தாளரை அழைத்தேன்.

ஓதுவாருக்கு  வக்கீலாக அவதாரம் எடுக்க.  

"ஞான பண்டித சுவாமி நமோ நாமே அருள் வாயே ..." மனம் முணுமுணுத்தது.


No comments:

Post a Comment