"எதுக்கு வெக்கப்பட..?", புரியாமே முழிச்சேன் , வழக்கம் போலே ...
எனக்கு ஒண்ணுமே புரியலே .
"இப்பிடி மொட்டையா சொன்னா எப்படிங்க?" - தெரிஞ்ச ஹிந்தி லே உளறினேன்.
வெக்கப்பட எவ்வளவோ இருக்கு , எதுக்குன்னு கேக்காம வெக்கப்படறது பகுத்தறிவு இல்லை. இது கூடவா தெரியாது எனக்கு ?
அவர் ஒரு படம் காண்பிச்சார்.
அது தான் இது.
"அதான் தெரியுதே, இப்போ என்ன அதுக்கு?", கடுப்பானேன் நான்.
கோவில் தெரியாதா எனக்கு?
இந்த மாதிரி ஓட்டை ஓடைசல் கோவில் எவ்வளோ இருக்கு தமிழ் நாட்டுலே. என்கிட்டயேவா ?
"இதை காப்பத்திட்டாங்க ..", என்றார் அவர்.
"யோவ், கோவிலை எங்கயாவது காப்பாதுவாங்களா?", பகுத்தறிவு பேசினேன் பெருமையுடன்.
"அறிவே இல்லாத உன்னைப் பெற்ற தாயை நான் பார்த்து வணங்க வேண்டும்" ங்கற மாதிரி அவர் ஏதோ ஹிந்தியில் சொன்னார்.
"இந்த கோவிலை யார் கட்டினாங்க தெரியுமா ? " - அவர்
"யாராவது வேலை இல்லாதவனா இருப்பான் " - நான்
"ராஜேந்திர சோழன் கட்டினான் " - அவர்
"சரி என்ன இப்போ " - நான்
"எப்போ கட்டினான் தெரியுமா"
"தெரிஞ்சு இப்போ என்ன ஆகப்போகுது " - நான்
"ஏழாம் நூற்றாண்டு "
"......... "
"இந்த கோவிலை யார் பாடினாங்க தெரியுமா ?" - அவர்
"யாரு SPB, யேசுதாஸ், சித்ரா ? யாரு, யாரு ?" - நான்
கெட்ட வார்த்தை சொன்னார். ( புரியலை)
"அப்பர் பாடினாரா ? " - அவர்
"யாரோட அப்பா ?" - நான்
மறுபடியும் கெ. வார்த்தை - ஹிந்தியில் ( தப்பிச்சேன் )
"சைவ சித்தாந்த தூண் - நாலு பேர்லே ஒருவர் - திருஞானசம்பந்தர் சுவாமிகள்" - அவர்.
"மியூசிக் யாரு ?", - நான்
இந்த முறை கெ.வார்த்தை புரிந்தது. தமிழில் திட்டினார்.
"இந்த கோவிலை இடிக்க இருந்தாங்களாம்" - அவர்.
"இப்போ இடிக்கலையா ?" - நான்
"இல்லை. மக்கள் போராட்டம் நடத்தி நிறுத்திட்டாங்கலாம்".
"யாரு இடிக்கப்பார்த்தாங்க? யாராவது ஆப்கானிஸ்தான்லேருந்து வந்தாங்களா ?" - நான் . ( என் பகுத்தறிவு அவ்வளவு தான் ).
திட்டி முடித்தபின் தொடர்ந்தார்.
"இல்லை. மத்திய அரசு".
"எதுக்கு இடிக்கணும்?" - நான்
"ரோடு போடறதுக்கு" - அவர்.
"அடச்சே, அவ்ளோ தானா ? ரோடு போடறதுக்கு இடிக்க பார்த்தாங்க. வேலை இல்லாத மக்கள் எதிர்த்தாங்க. அதுனாலே இடிக்கலே. அதானே " - நான்
தற்போது சுத்த ஹிந்தியில் உரத்த குரலில் அவர் பின்வருமாறு :
"அறிவு கெட்டவனே , உனக்கு வெக்கமா இல்லே ? 1300 வருஷ கோவில். ராஜேந்திர சோழன் கட்டினது. இடிக்கறான். என்னமோ கொசு கடிச்சா மாதிரி உக்கார்ந்து இருக்கே !
புலியை முறத்தாலே விரட்டினா தமிழ் பெண் னு பெருசா பேசறீங்க, இங்கே ஒரு கலாச்சாரமே பாழாப் போகுது ஒரு உணர்ச்சியும் இல்லாம இருக்கீங்களே , நீயெல்லாம் ..."
இப்படி பல அர்ச்சனை செய்தார். நான் அசருவேனா என்ன ?
"ஒரு கோவில் தானே ? போனா போகுது. அதுவே 1300 வருஷம் பழசு. போனா போகட்டுமே. இதுக்கு போய் அலட்டிக்கலாமா ?
நானே 'விஸ்வரூபம்' முதல் நாள் முதல் ஷோ போக முடியலேன்னு சோகமா இருக்கேன். இப்போ போய் கோவில், கலாச்சாரம், அது இதுன்னு ..
இதுக்குதான் இந்த ஹிந்தி காரங்க கிட்டே பேசவே கூடாது. அவுங்க ஏதாவது கிளப்பி விட்டுடுவாங்கனு எங்க தலைவருங்கல்லாம் சொல்லி இருக்காங்க.."
"டேய், உனக்கு உண்மையாவே வெக்கமா இல்லை ?" - அவர்.
"அட போங்க சார். தமிழ் நாட்டுலே ஆயிரம் கோவில் இருக்கு அவ்வளவும் ஆயிரம் வருஷம் பழசு. அதெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? இடிஞ்சு போய் பாழா கெடக்கு.
அவ்ளோ ஏன்?
தேரழுந்தூர்னு ஒரு ஊரு. மயிலாடுதுறை பக்கமா இருக்கு. 108 திவ்ய தேசங்கள்ளே ஒண்ணு. ஆழும் பாழுமா போய் இப்போ தான் Retire ஆன மூணு வேலை இல்லாதவங்க சேர்ந்து ஊர் ஊரா போய் வசூல் செஞ்சு, ஆளபுடிச்சு மராமத்து வேலை செஞ்சு கொஞ்சம் அரசாங்க உதவி வாங்கி இப்போ கோவில் கோவிலா இருக்கு. போன மாசம் போன பொது ஊர்காரங்க சொன்னங்க.
அதே ஊர்லே கம்பர் பிறந்த இடம் இருக்கு. ASI - Archaeological Survey of India - அதாங்க, தொல் பொருள் ஆய்வுத்துறை - அவங்க கீழே வருது. வெறும் மண் மேடா இருக்கு. அதுலே காமெடி என்னன்னா
"This place is under the custody of The Archaeological Survey Of India "
ன்னு பலகை வேறே. அங்கே ஆடு மாடு மேஞ்சு கிட்டு இருக்கு. அதுக்கு பேரே கம்பர் மேடு தான்.
கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவி பாடும்னு சொன்னோம். இப்போ கம்பர் வீடே இல்லாம மேடா இருக்கு. இதோ பாருங்க இதான் அந்த இடம்.
தாய் தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் னு சொன்னோம் .
ஆனா தமிழ் வளர்த்த கம்பர் பிறந்த இடத்த மறந்துட்டோம் .
இந்த நாட்டுலே போய் நீங்கே ஒரு கோவில் காப்பாத்திடோம்னு சொல்றீங்க".
அவர் வாய் அடைத்து நின்றிருந்தார்.
அந்த தைரியத்தில் மேலும் தொடர்ந்தேன்.
"எல்லாம் சரி. கோவில் நிலங்கள எல்லாம் எவனோ சாப்பிடறானே, அதுக்கு என்ன செஞ்சோம் ?
கோவில் லே பெருமாளை சேவிக்க காசு வாங்கறாங்களே அரசாங்கதுலே, ஏழை மக்கள் எப்படி வருவாங்க கோவிலுக்கு ?
கோவில் லே வேலை செய்யறவங்களுக்கு சம்பளம் கொடுக்கறோமா ? என்ன செஞ்சோம் ? போராட்டம் நடத்தினோமா ?
கோவில் சிலை எல்லாம் திருட்டு போகுதே. நமக்கு என்ன அதைப்பத்தி னு இருக்கோமே ?
சாமி நம்பிக்கையே இல்லமே இருக்காங்களே அவங்களை கோவில் அறங்காவலர் னு வெச்சிருக்கோமே ? போராட்டம் நடத்தினோமா ?
இது எதுக்கும் ஒண்ணும் செய்யலே. ஏன்னா நாங்க மறத்தமிழர்கள். எங்களுக்கு மானம் , ரோஷம் எல்லாம் மரத்துப் போச்சு.
இப்போ எல்லாம் எங்களுக்கு தேவை ஒரு சினிமா, ஒரு நடிகை, ஒரு நடிகன், அப்புறம் 24 மணி நேரமும் TV.
இப்போ விஸ்வரூபம் படம். அது தான் முக்கியம்.
இது தெரியாமே வெக்கமா இல்லையானு ஒரு கேள்வி கேக்கறீரோ ?
வெக்கமா ? எங்களுக்கா ? அடப்போங்கையா... ".
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
நண்பரைக் காணவில்லை. கண்டு பிடித்துக் கொடுப்போருக்கு ஒரு பிளாஸ்டிக் கிண்ணம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment